தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இத்தாலியில் விமானப் போக்குவரத்து நேற்று 50 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. இதனால் நாடு முழுவதும் விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டன.
விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு சேவைகளுக்கான தரவு பரிமாற்ற வலையமைப்பில் ஏற்பட்ட கோளாறால் ரோம், மிலன், பெர்காமோ நகரங்களில் உள்ள விமான நிலையங்கள் பாதிக்கப்பட்டன. மாற்று அமைப்புகள் மூலம் விமானங்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இத்தாலி வான்வழிப் போக்குவரத்து அமைப்பு (ENAV) தெரிவித்தது.காலை 6 மணி வரை மாற்று ஏற்பாடுகள் மூலம் விமானப் போக்குவரத்து வழக்கம்போல நடைபெற்றது. பின்னர், போக்குவரத்து அதிகரித்ததால் விமானங்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டது.
கோளாறைச் சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு சைபர் தாக்குதல் காரணமல்ல என்றும், விமானப் போக்குவரத்துப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் வான்வழிப் போக்குவரத்து அமைப்பு தெரிவித்தது.